யாழ்ப்பாண மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டது கண்டன அறிக்கை...!!
[2026-04-29 17:07:51] Views:[119]
“தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,
குறித்த அறிக்கையில் இலங்கை மீனவர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது. குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளனர்.
ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன்வள வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் . குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.










