ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள்..!!
[2026-04-27 23:03:51] Views:[136]
ஜப்பானின் வடக்கு பிராந்தியத்தில் இன்று (27) அதிகாலை ரிச்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறு நகரத்திற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது கடற்பரப்பிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டிடச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜப்பானில் 7.7 ரிச்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் எந்நேரமும் ஒரு 'மெகா' நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.










