ஐ.நா அமைதிப்படையில் இலங்கை இராணுவம்
[2026-04-06 18:42:01] Views:[77]
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகள் திணைக்களத்துடன் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து, ஹைய்டியில் ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் படையினரை இணைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
படையினரை அங்கு விரைவாக பணியில் அமர்த்துவது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரே பிரான்ஷேவுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.
ஹெய்டியில் 11 ஆண்டுகள் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை படைகள், 2015-ஆம் ஆண்டில் நடவடிக்கைகளை முடித்து நாடு திரும்பியிருந்தன.
2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை படையினர் ஹெய்டியில் அமைதி காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










