யாழில் பேருந்து நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்..!!
[2025-12-06 20:27:11] Views:[14]
யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே இளைஞர் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறி பயணித்துள்ளார்.
குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்திக்கு போகவுள்ளதாக கூறியுள்ளார். நடத்துனர் மீதி 10 ரூபாயை இறங்கும் போது தருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் கட்டணத்திட்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டுள்ளார்.
கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கி பேருந்தின் படியில் இருந்தும் அவரை கீழே தள்ளி விழுத்தியுள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் இரு தரப்பையும் விசாரித்ததனை தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாங்க கூறப்படுகிறது.










