இலங்கையில் இன்று மோசமான வானிலை: கொந்தளிக்கும் கடல்..!
[2025-11-07 14:41:04] Views:[15]
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.










