இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு தடை.!
[2025-08-06 12:34:57] Views:[14]
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் தடைசெய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
அதனடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விளம்பரங்கள் மற்றும் ஆலோசனை வழங்க மாணவர்களை ஒன்று திரட்டுதல் ஆகிய வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 எனும் துரித இலக்கம் அல்லது 0112 784208 - 0112 784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களை அடைய வேண்டும் என தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.










