யாழ் கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6 வரை விளக்கமறியல்.!
[2025-07-26 20:36:08] Views:[14]
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 07 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
வழக்கு மீண்டும் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










