சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகை இரசாயன பொருட்களுடன் மூவர் கைது!
[2025-01-03 23:34:07] Views:[10]
யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெருந்தொகையான இரசாயன பொருட்களுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) இரவு 7.30 மணியளவில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலனை கிழக்கு, வேலனை பகுதியில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி என பெருந்தொகை இரசாயன பொருட்கள் அடங்கிய 37 பொட்டலங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பொருள்கள் கொண்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தாவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இரசாயன பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










