யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபரின் சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!
[2025-01-02 21:16:11] Views:[11]
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட 40 வயதுடைய நபரின் சடலமே தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார், இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ள நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை. அத்துடன்,குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்தவகையில் சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் எல்லைக்குள் உள்ளமையால் குறித்த நபரின் சடலத்தை நாளையதினம்(03) தோண்டி உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாளையதினம் குறித்த நபரின் சடலம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.










