150 கோடி மோசடி: நாடு கடத்தப்பட்ட தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[2024-12-27 12:42:52] Views:[13]
நிதி மோசடி செய்துவிட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குறித்த கணவன், மனைவி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உரிய அனுமதியில்லாமல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.
கடல் மார்க்கமாக சென்ற இவர்களை நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் வைத்து காவற்துறையினர் கைது செய்து திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த தம்பதி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி முறைப்பாடு இருப்பதால், இலங்கை அரசின் வேண்டுதலுக்கமைவாக மீண்டும் இலங்கைக்கு நேற்று வியாழக்கிழமை (26.12.2024) அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்த அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்ததாகவும், இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் அவர்களுக்கு எதிராக இலங்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










