திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்!
[2024-12-27 09:10:11] Views:[11]
திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டு கரைக்கு இழுத்துள்ளது.
சுமார் 40 கிலோ எடையுள்ள குறித்த ஆளில்லா விமானம் நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் விமானப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த விமானத்தை விமானப்படை முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கிகனகேவிடம் வினவிய போது;
இது இலக்கு ஆளில்லா விமானம் எனவும், இந்த வகை விமானம் ஒன்று இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டிலேயும் மீட்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுகிறது இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள விமானம் பாதிப்பை ஏற்படுத்தாது, அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இம்முறை மீட்கப்பட்டுள்ள விமானம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.










