நாடளாவிய ரீதியில் கோடிக்கணக்கில் திருடிய யாழ். இளைஞர்கள் குழு கைது!
[2024-12-26 11:14:44] Views:[12]
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா மற்றும் கம்பளை போன்ற பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்றை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கம்பளை, கலஹா பொலிஸார் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 21இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்கள் என பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிய குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் ஆறு திருட்டுகளும், வவுனியா பகுதியில் ஏழு திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளும் குறித்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பிரதேசத்த்தை சேர்ந்த குறித்த இளைஞர்கள் குழு நான்கு வருடங்களாக இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வழங்கிய பிடியாணையுடன் மாத்தளை, கந்தபொல, கலஹா போன்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19,21,22,23,26 மற்றும் 33 வயதுகளை கொண்டவர்கள் எனவும், இவர்கள் இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை போதைப்பொருள் பாவனைக்கு செலவலித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், சந்தேகநபர்களை கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










