யாழ் ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.!
[2024-11-29 12:38:54] Views:[11]
யாழ் ராணி புகையிரத என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அரச சேவையாளர்கள், தனியார்துறை பணியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்களின் நலன் கருதி, 2022 ஜுலை மாதம் 11ம் திகதி இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கின் முதலாவது பிராந்திய புகையிரத சேவையாக, காங்கேசன்துறை முதல் அறிவியல்நகர் வரையில் நடாத்தப்பட்ட இந்தச் சேவை, யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை தடைப்பட்டிருந்த காலத்தில் அனுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டு, வடக்கில் தடையின்றிய புகையிரத சேவையாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது இந்தச் சேவை தடைப்பட்டிருப்பதால் தினமும் கிளிநொச்சிக்கு தொழில் நிமித்தம் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது முயற்சியால் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










