பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திடீரென வடக்குக்கு விஜயம்;
[2024-11-29 11:00:14] Views:[12]
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளின் கள நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா நேற்று (28) முற்பகல் திடீரென சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் பணிப்புரை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்புக்கு உள்ளான பருத்தித்துறை, கற்கோவளம் புனிதநகர் கிராமத்துக்கு நேரடியாக விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் வெள்ள நிலைமை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்ததுடன் கிராம மக்களிடமும் கலந்துரையாடினார்.
இதன் போது கிராமத்தில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தான் கொண்டு செல்வதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் அவர் நேரில் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.










