மாவடிப்பள்ளி வெள்ளத்தில் சிக்குண்ட இரண்டு மாணவர்களின் உடலங்கள் மீட்பு : தேடும் பணி தொடர்கிறது;
[2024-11-27 18:08:05] Views:[12]
காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் நேற்று (26) மாலை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை இன்று காலையும் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.
அதன்போது இரண்டு மாணவர்களின் உடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர் பாரூக் முஹம்மட் நாஸிக் (15 வயது) மற்றும் இன்னுமொரு அடையாளம் தெரியாத ஒருவரின் உடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டது.
மீட்புப்பணியாளர்களினால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இன்று காலை அம்பாறை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர், கணக்காளர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், பாதுகாப்பு படை உயரதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் இங்கு விஜயம் செய்து துரிதல் கதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.










