இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு !
[2024-11-22 21:41:16] Views:[12]
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது இன்றையதினம் (22.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல்.எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்றைய தினம் (21) இடம்பெற்ற போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணொளியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்துள்ளதனால் அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் தமிழீழத்துடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டு அவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும். ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக முறைப்பாடு பதிவு செய்த சிவில் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.










