புதிய அரசில் வெளிவிவகார அமைச்சர் எம்.ஏ. சுமந்திரன்.?
[2024-10-25 13:01:00] Views:[11]
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி இணையும் என்றும், வெளிவிவகார அமைச்சுப் பதவி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஊடகமொன்றுக்கு நேற்று (24) வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது அரசுடன் இணையுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனக்குக் கிடைத்த தகவலைத் தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.
தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல்.
இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம்.
2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனையாகும்.
அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன்.
இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம். உண்மையை நாட்டு மக்களுக்குக் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது.
மேலும், சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராவது பிரச்சினை அல்ல, அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான் பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார்.










