யாழ்ப்பாணத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரை கண்டறிய மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் ;
[2024-08-31 12:21:04] Views:[9]
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வரும் சந்தேகநபரை கண்டறிய விபரம் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் வீடுகளுக்கு புகுந்த திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் புகுந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. வீட்டினுள் நுழையும் போது ஒரு சேர்ட்டும் , திருடிய பின்னர் வீட்டில் இருந்து வெளியேறும் போது வேறு ஒரு சேர்ட்டும் அணிந்து திருட்டு சந்தேகநபர் தப்பி சென்றமை பதிவாகியுள்ளது.
குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தவர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591337 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










