யாழில் வெளிநாட்டு ஆசையால் வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா பணத்தை இழந்த நபர்....!!!!
[2024-08-07 09:17:57] Views:[13]
யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் குறைந்த கட்ணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட் எடுத்தும், தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட நபருக்கு அனுப்பியுள்ளார்.
சிலநாள்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா பணம் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் A.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










