யாழில் கோவில் நகைகள் திருட்டு!
[2024-07-24 11:48:49] Views:[9]
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட பூசகரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 3 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டதாகவும் இதன்படி பூசகரிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளை பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட
நிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸ் குழு இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் 28 வயதுடைய பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவி பூசகராகச் செயற்பட்டிருந்தார். சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்த
நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின் போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.










