போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!
[2024-07-08 09:29:52] Views:[9]
போலியாக தயாரிக்கப்பட்ட இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியா நோக்கிச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (UL-263) விமானத்தில் சவூதி அரேபியா சென்று, அங்கிருந்து வேறு விமானம் மூலம் குறித்த இளைஞன் கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
விமான நிலைய சோதனைகளை முடித்துக் கொண்டு வந்த குறித்த இளைஞனை குடிவரவுத் துறையின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்துள்ளனர்.
அதன்போது, குறித்த கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனத் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து, இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.










