மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளான ஈ.பி.டி.பி அமைப்பாளர் மரணம்..!
[2024-07-01 11:40:45] Views:[10]
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஈ.பி.டி.பி கட்சியின் அமைப்பாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 20.06.2024 அன்று இரவு யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் வடக்கு வேம்படி பகுதியில் உள்ள தனது மீன் வாடியில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (30.06.2023) உயிரிழந்துள்ளார்.
மருதங்கேணியைச் சேர்ந்த சரவணபவானந்தன் சிவகுமார் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளராகவும், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் இயக்குனருமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.










