யாழில் மேலும் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிப்போம்: ஜனாதிபதி தெரிவிப்பு
[2024-05-25 12:47:38] Views:[9]
யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், என்சிய பகுதியில் இருக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. விசேட ஆய்வுகளின் பின்னர் மேலும் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது என யாழில் ஜனாதிபதி தெரிவித்தார்.
'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் உரையாற்றும் போது:
காணிப் பிரச்சினை வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரச காணிகளில் குடியேற்றப்பட்ட மக்களைத் தவிர யுத்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் ஏராளம்."
தொல்பொருளியல் திணைக்களத்தின் கீழும் அதிக அளவிலான காணிகள் உள்ளன. தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு தேவையான காணிகளை தவிர்த்து ஏனைய காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. விசேட ஆய்வுகளின் பின்னர் மேலும் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்க எதிர்பார்க்கின்றேன். அத்துடன், கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இம்மாகாண மக்களுக்கு தேவையான வீட்டுத்திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க முடியவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அது ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூற விரும்புகிறேன் என தெரிவித்தார்.










