கடல் கொந்தளிப்பு!
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்கான படகு சேவை இன்று இடம்பெறாது:
[2024-05-24 07:19:28] Views:[13]
யாழ். நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் படகு சேவைகள் இன்று (24-05-2024) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வளிமண்டலவியல் திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் இன்று (24)வெள்ளிக்கிழமை கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை அம்மன் இறங்குதுறையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் படகு போக்குவரத்து இடம்பெறமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது எனவும், தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










