உயிருக்கு போராடிய மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்: ஒருவர் சடலமாக மீட்பு...!
[2024-05-18 11:46:25] Views:[10]
கடந்த 12 ஆம் திகதி கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
இவர்கள் சென்ற இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து, அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தமையை அவதானித்து, தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் மீட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார், என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தமையையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரையும் இறந்தவரின் சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவு கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்தனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.










