அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வேலைத்திட்டம்: 50000 புதிய வேலைவாய்ப்புகள்
[2024-05-04 12:10:39] Views:[21]
இலங்கையில் 38 புதிய சுற்றுலா வலயங்களை நிறுவி அவற்றின் மூலம் 50000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சுற்றுலா வலயங்கள் கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பின்னவல மற்றும் கித்துல்கல பிரதேசங்கள் உட்பட பல பகுதிகளில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கன நுழைவாயிலில் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள், கேகாலை மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் சுற்றுலாப் பாதையின் அபிவிருத்தி செயற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே பிரதான பணியாக அமையும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் முழுப் பிரதேசத்தையும் சுற்றுலா நகரமாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










