சிவனொளிபாத மலையிலிருந்து விழுந்த இளைஞன் 4 நாட்களுக்கு பின்னர் மயங்கிய நிலையில் மீட்பு!
[2024-04-25 09:21:44] Views:[9]
கடந்த 19ஆம் திகதி சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற இளைஞர் ஒருவர் மலையிலிருந்து விழுந்து காணாமல் போயிருந்த நிலையில், 5 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மகர சூரியவேவ பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய இரண்டு பெண்களுடன் வந்த 33 வயதுடைய தினேஷ் ஹேமாந்த என்ற இளைஞர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் மலையிலிருந்து விழுந்துள்ளார்.
அவர் மலையிலிருந்து தவறி விழுந்துவிட்டதாக அவருடன் வந்த பெண்கள் சிவனொளிபாத மலை காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
பின்னர் இராணுவம் மற்றும் விசேடஅதிரடி படையினர் தேடுதல் நடத்திய போதும் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று மாலை சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள தொழிலாளர்கள் குறித்த நபர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோட்ட தொழிலாளர்களின் உதவியுடன் அந்த நபரை மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் போது தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மலையிலிருந்து பாதுகாப்பு வேலியை கடந்து கீழே விழும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










