யாழில் நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்று! பெண் பலி! பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை:
[2024-04-16 12:03:41] Views:[12]
சிகிச்சைக்காக பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் சுகவீனமடைந்த நிலையில் ஆயுள்வேத சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை, அராலியில் பகுதியில் தங்கியிருந்த குறித்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பின் பின் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 12ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.










