தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்... !
[2024-04-13 15:14:47] Views:[359]
புது வருடம் பிறக்கும் நேரம்
மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும் .
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்: குரோதி தமிழ் வருஷ பிறப்பு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 31ம் நாள் (13/04/2024) சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் குரோதி வருடம் ஆரம்பமாகின்றது.
விஷு புண்ணிய காலம்
மேலும் அன்றைய தினம் திருக்கணிதத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 மணி முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக திருக்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குனி 31ஆம் நாள் (13.04.2024) மாலை 4.15 இல் இருந்து நள்ளிரவு 12.15 வரையான காலத்தில் விஷு புண்ணிய காலமான இந்நேரத்தில் மருத்துநீர் தேய்த்து சிரசில் புன்கிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து தோஷ நிவர்த்தி பெறுவது நன்மையானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 முதல் பின் இரவு 1.04 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் வைத்து தலையில் ஆலிலையும் காலில் இலவம் இலையும் வைத்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
ஆடைகள்
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரோதி வருடப்பிறப்பு புத்தாடை நிறமாக கபிலம், பட்டு போன்ற வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளை கரை கொண்ட புதிய பட்டாடை அணிவது சிறப்பானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷ பிறப்பு புத்தாடையாக கருநீல நிற பட்டு அல்லது நீல கரை வைத்த புது வஸ்திரம் அணிவது சிறப்பானதாகும்
புத்தாடை ஆபரணம்
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புத்தாடை ஆபரணமாக நீலக்கல் அல்லது வைரம் போன்ற ஆபரணம் அணிந்து கொள்வது சிறப்பானதாகும்.
அதேவேளையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதிய ஆபரணமாக இந்திர நீலம் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிவது சிறப்பானதாகும்.
புதுவருஷ கைவிஷேட நேரங்கள்
புதுவருஷ கைவிஷேட நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும் மறுநாள் சித்திரை இரண்டாம் நாள் திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55ல் இருந்து 10.30 வரையிலான காலமும் கை விஷேடத்திற்குரிய சுப நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோதி வருஷம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட நேரங்களாக சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணியில் இருந்து 11.15 வரையிலான நேரமும் அதேநாள் மாலை 6.30 இல் இருந்து 7.45 வரையிலான நேரமும் சித்திரை 2ம் நாள் திங்கட்கிழமை அதாவது (15.04.2024 )காலை 6.00 ல் இருந்து 7.25 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.35 இல் இருந்து 10.35 வரையிலான நேரம் கைவிஷேட நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல்
குரோதி வருஷம் வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55 இல் இருந்து 10.30 வரையிலான நேரமும் சித்திரை 05 அதாவது (18.04.2024 )வியாழக்கிழமை பகல் 10.49 இல் இருந்து 11.50 வரையிலான நேரம் வியாபாரம் செய்வதற்கும் புதுக்கணக்கு பதிவதற்கும் சிறப்பானதாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரோதி வருஷப்பிறப்பின் வியாபாரம் புது கணக்குப்பதிதல் சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 10.00 ல் இருந்து 11.30 வரையிலான காலமும் சித்திரை 20ம் நாள் (03.05.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 இல் இருந்து 10.15 வரையிலான காலமும் சித்திரை 23 (05.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 இல் இருந்து 10. 40 வரையிலான காலமுமம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாபாரம் புதுக்கணக்கு பதிவதற்கான சுப நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புது வருடத்தில் செயற்படுத்தக்கூடிய நற்கருமங்களை சிந்தித்து மங்களகரமாக வாழ்வோமாக.










