கசிப்பு உற்பத்தி செய்த இளைஞன் ஒருவர் கைது - புதுக்குடியிருப்பில் சம்பவம்.
[2024-03-29 21:53:08] Views:[9]
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பிரதேசத்தில் நேற்று (28) இரவு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை காவல் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது 56 லீட்டர் கசிப்பும், மூன்று பரல்களுக்குள் 75 லீட்டர் எரிந்த கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திற்கு பயன்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும் என புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.










