வீட்டு கூரையில் விழுந்த பாரிய பனிகட்டி
[2024-03-13 16:17:51] Views:[9]
நேற்று(12) பிற்பகல் டின்பொல மொரகொல்ல தோட்டத்தின் புதிய பிரிவில் உள்ள தோட்ட வீடொன்றின் கூரை மீது சுமார் ஐந்து கிலோவிற்கும் அதிக நிறையுடைய பாரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பனிக்கட்டி வீட்டின் மீது விழுந்த போது அங்கு யாரும் இல்லையெனவும் வீட்டின் மேற்கூரை தகரத்தால் மூடப்பட்டிருந்ததாகவும் பலத்த சத்தத்துடன் இந்த பனிக்கட்டி கூரையின் மீது விழுந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வீட்டில் ஒரு தாயும் மகனும் வசித்து வருவதுடன், மகன் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில் தாய் அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு 7:30 மணியளவில் தாய் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டு மகனுக்கு தெரிவித்துள்ளதையடுத்து வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆய்வு செய்த போது இந்த பனிக்கட்டியை அவர் கண்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.










