யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் பண மோசடி - 27 வயதான யுவதி கைது
[2024-03-11 09:43:43] Views:[9]
யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழ் நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளதுடன் அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.
அதில் பணத்தை வழங்கியவர் அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளதாகவும் தெரிய வருகிறது.










