யாழ் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேச சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய குழு நியமனம்!
[2024-03-01 20:58:39] Views:[9]
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் ஐவரடங்கிய குழு இன்றைய தினம் (01) நியமிக்கப்பட்டது.
நேற்று (29) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஆளுநர் உரிய தீர்வுகளை வழங்குவதற்கு குழு நியமிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதற்கமைய இன்று நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவின் ஊடாக யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இணைந்த நேர அட்டவணைக்கு அமைய தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்திற்குள் ஆளுநருக்கு சமர்பிக்க வேண்டும் என குறித்த குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










